Wednesday 8 January 2014

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்..!


அன்பு அண்ணன் பராக் ஒபாமாவுக்கு,
வணக்கம்,
சமிபத்தில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே என்பவரை தங்களின் அமெரிக்க போலிஸ் நடு வழியில் வைத்து கைது செய்த சம்பவம் தேச பக்தி போதையில் உருண்டு கொண்டிருக்கும் என் போன்ற இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் அரசாங்கத்துக்கு போலி ஆவணங்களை தந்ததோடு தனது பணியாளருக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஊதியத்தை தராத தேவயானி கோப்ரகடேவை ஒரு கிரிமினல் குற்றவாளி போல நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எங்கள் நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோஷம் நீண்டகாலமாக ஒலித்துக் கொண்டிருந்தாலும் சட்டம் என்பது மேட்டுக்குடிகளின் காலுக்கு கீழே அழுக்கு படிந்து கிடக்கும் ஒரு கம்பளமாகவே காட்சியளிக்கிறது.

மேட்டுக்குடியின் முன் நின்று வாலை ஆட்டும் சட்டம் ஏழை எளியமக்களைக் கண்டால் அவர்கள் மீது ஏறி விழுந்து கடித்து குதறுகிறது.உயர் பதவியிலிருப்பவர்கள், செல்வம் படைத்த பெரிய மனிதர்கள், ஊழல் மற்றும் சுரண்டல்கள் மூலம் கோடிகோடியாய் குவித்த ஊழல் பேர்வளிகள், அதிகார மையங்களையே தங்கள் காலில் விழச்செய்யும் அழவிற்கு சர்வ வல்லமை பொருந்திய ஆன்மீக வாதிகள் இவர்கள் எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் சட்டம் அவர்களோடு சமபந்தியில் சங்கமித்திருக்கும்.

எங்கள் நாட்டில் இந்துமதத்தின் போப் ஆண்டவராக சித்தரிக்கப்பட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார்.பிரதமர், ஜனாதிபதி ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட இவரது காலடியில் விழுந்து ஆசிபெறுவதை ஒரு பாக்கியம் எனக் கருதுமளவிற்கு முக்கியமான ஒரு அதிகார மையமாக விளங்கியவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலுள்ள இவரது ஆசிரமத்தில் தவறுகள் நடப்பதாகவும் ஆகம விதிகளுக்கு விரோதமாக சங்கராச்சாரியார் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் சங்கரராமன் என்ற ஆசிரம ஊழியர் புகார்களை எழுதிக் குவித்தார்,
ஒருநாள் சங்கர்ராமன் காஞ்சிபுரம் கோயில் வளாகத்தில் வைத்தே பட்டப்பகலில் ஒரு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.விசாரணையில் சங்கராச்சாரியார்தான் சங்கரராமனை கொலை செய்த்தாக கூறிய காவல்துறை அவர் மேல் வழக்கு பதிவு செய்து அவரை சிறைக்கும் அனுப்பியது.

ஆனால் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே எங்கள் மாகாணத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது.அதுவரை நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக சங்கராச்சாரியாருக்கு எதிராக சாட்சியமளித்த பலரும் தாங்கள் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்களை திடீரென மறுத்தனர். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியும் குழந்தைகளும் கூட தொடர் அச்சுறுத்தல்களால் பிறள் சாட்சிகளாயினர். சமிபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது சங்கராச்சாரியார் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் பெரிய ஆனமீக குருவாக இருந்த ஒரே காரணத்தால் சட்டம் அவரை நிரபராதியாக விடுதலை செய்தது. என்னதான் இருந்தாலும் இந்தியா ஒரு ஆன்மீக நாடல்லவா..?
அதே போன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேற்றிவாளன் என்ற இளைஞன் கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில் வேலூர் சிறையின் மரணக்கொட்டடியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கிறான்.

ராஜிவ்காந்தி படுகொலை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கான பேட்டரியை வாங்கித் தந்தான் என்பதுதான் இவன் மீதான குற்றச்சாட்டு.

நீண்ட நாட்களாக தான் ஒரு நிரபராதி என்று கூறிவரும் பேற்றிவாளன் ’கொலையாளிகள் ராஜிவை கொலை செய்யும் திட்டத்தோடு வந்திருக்கிறார்கள் என்பதையோ தான் வாங்கித்தந்த பேட்டரி மூலம்தான் வெடிகுண்டை வெடிக்கச்செய்யப்போகிறார்கள் என்பதையோ தான் அறிந்திருக்கவில்லை’ என்று கூறிவருகிறார்.

ஆனால் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி கொலையாளிகள் ராஜிவ் காந்தியை நெருங்குவதற்கு உதவியாக செயல்பட்டவர்கள் ராஜிவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான சில காங்கிரஸ் பிரபலங்கள்.
பாதுகாப்பு வலையங்களை தங்கள் உதவியோடு தாண்டி ராஜிவ் காந்தி அருகே வந்தம் அந்த நபர்கள் அவரை கொல்லும் நோக்கத்தில் தான் வருகிறார்கள் என்பது எப்படி அவர்களை அங்கு அழைத்துவந்த அந்த காங்கிரஸ் காரர்களுக்கு தெரியாதோ அதே போலத்தான் தான் வாங்கித்தந்த பேட்டரி ராஜிவ்காந்தியை கொல்ல பயன்படப் போகிறது என்ற உண்மை பேறறிவாளனுக்கும் தெரியாது.

ஆனால் கொல்லப்பட்டவர் நாட்டின் மிக முக்கியமான நபர் என்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததாலும் காவல்துறையும் விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றமும் ராஜிவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன் ராஜிவ் கொலைவழக்கில் பேறறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த சிபி ஐ புலனாய்வு அதிகாரி தியாகராஜன், பேற்றிவாளனின் வாக்குமூலத்தை தான் பதிவு செய்த போது அதில் சில தவறுகளை செய்து விட்டதாகவும் அதன் விளைவாகவே பேற்றிவாளனுக்கு மரண தண்டனை கிடைத்ததாகவும் பேற்றிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்று தான் கருதியவதால் அப்போது அவ்வாறு செய்ததாகவும் இப்பொது தனது மனசாட்சி உறுத்துவதாலேயே காலம் கடந்து உண்மையைக் கூறுவதாகவும்.. பேறறிவாளன் நிரபராதி என்றும் கூறியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஒரு இளைஞனை குற்றவாளி என தீர்ப்பு எழுதிய பிறகு அந்த தண்டனைக்கு காரணமான வாக்குமூலத்தை எழுதிய அதிகாரியே தான் தவறு செய்துவிட்டதாக கருத்து தெரிவித்த பின்னும் அந்த இளைஞன் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருப்பதுதான் இந்தியாவின் நீதி.
சென்னையை சார்ந்த சரவணபவன் குழுமம் இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகோபால் ஏற்கனவே இரு பெண்களை திருமணம் செய்த நிலையில் மூன்றாவதாக தனது நிறுவனத்தில் வேலைபார்த்த நிர்வாகி ஒருவரின் மகள் மீது காதல்கொண்டார்.

திருமணமான அந்த பெண்ணை பல வழிகளிலும் துன்புறுத்தியதோடு கடைசியில் அந்த பெண்னின் கணவனையும் கடத்திச் சென்று கொன்று புதைத்து விட்டார். இது புகாராகி பெரும் பரபரப்பான வழக்கானது அனாலும் ராஜகோபால் இப்போதும் ஒரு கம்பீரமான தொழில் அதிபராகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த சரவணபவன் நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளுக்கு போலியான ஆவணங்கள் மூலம் ஊழியர்களை வேலைக்கு எடுத்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் புகார் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த புகாரின் மீது சென்னை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது.

சென்னையில் கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ஓய்வில்லாமல் உழைக்கும் காவல் துறையினருக்கு காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் தாயுள்ளத்தோடு இலவச உணவு வழங்கி வருகிறது சரவணபவன்.

இங்கு கையேந்தாத காவலர்கள் மிகக் குறைவு. குறைந்த வருமானத்தில் வாயைக்காட்டி வயிற்றைக்கட்டி வாழும் ஏழைக்காவலர்களுக்கு உணவு வழங்கும் சரவண பவன் நிர்வாகத்தின் மீது கொஞசம் கூட நன்றி விசுவாசமே இல்லாமல் நடவடிக்கை எடுக்கக் கோருவது எந்த வகையில் நியாயம்.. அப்படி சரவணபவன் மேல் நடவடிக்கை எடுக்க அந்த அளவிற்கு நன்றி கெட்டவர்களா எங்கள் காவல் துறையினர்.

மேக்டோனல்ஸும் கெ எஃப் சி யும் உங்கள் ஊரில் ஒரு போலீசுக்கு ஒரு துண்டு பர்கர் பீசாவது இலவசமாய் குடுத்திருக்குமா..?

எங்கள் ஊரில் காவலர்களுக்கு வயிறார உணவு வழங்கும் சரவணபவன் மீது புகார் கொடுக்கவேண்டும் என்ற கொடிய எண்ணம் உங்களுக்கு வந்தது..?

சமிபத்தில் முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி வெங்கடேசன் என்பவர் வீட்டில் முருங்கைக் கீரை பறித்ததாக இரண்டு கூலித் தொழிலாளிகளை கைது செய்து சிறைக்கு அனுப்பிய எங்கள் ஸ்காட்லாண்ட் யார்ட் கனிம வழங்கள் கொட்டிக்கிடக்கும் கடற்கரைகள் காடுகள் மலைகள் ஆறுகள் என்று நாட்டையே கபளீகரம் செய்து கொண்டிருக்கும் மாபியாக்களுக்குமுன் மௌனமாய் கைக்கட்டி நிற்கிறது.

இத்தனைக்கும் முருங்கைக்கீரை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி வெங்கடேசனின் வீடே பொது இடத்தை அபகரித்து கட்டப்பட்டிருபாதாக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை ஏற்கனவே குற்றம் சாட்டியிருக்கிறது.

அரசு நிலத்தை அபகரித்து கட்டப்பட்ட அந்த அந்த வீட்டில் முருங்கைக் கீரை பறித்த இரண்டு அன்றாடம் காய்ச்சிகளை ஏதோ தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் ரேஞ்சுக்கு சுற்றிவளைத்து சிறைக்கு அனுப்பிய எங்கள் காவல்துறை மும்பை குண்டுவெடிப்போடு தொடர்புடையதாக கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருக்கும் சஞ்சை தத்துக்கு மாலை நேரங்களில் மது விருந்து கொடுத்து அவர் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் எங்கள் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் சட்டம் சொல்லும் நீதி. ஆனால் சட்டம் இயற்றும் அமைச்சர்கள் துவங்கி திகாரமையங்களிலிருக்கும் பலரும் பல தாரங்களுடன் வாழ்பவர்கள். இவர்களின் இரண்டாம் மனைவிகள் அரசியலில் பலம் பொருந்திய அதிகார மையங்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை இந்த அதிகார மையங்களுக்கு சல்யூட் அடித்து நிற்கின்றன.

முதல் மனைவி இரண்டாவது மனைவி பிரித்துப் பாராமல் எல்லோரையும் சமமாக பாவிப்பதுதானே எங்கள் கலாச்சாரத்தின் இயல்பு.

சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மாகாணத்தில் அப்போதும் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசாங்க சொத்தை தன்பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்து வந்த அரசு அவர்மேல் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. விசாரணையின்போது குறிப்பிட்ட சொத்துக்கான பத்திரப்பதிவு ஆவணங்களில் இருப்பது தனது கையெழுத்தே அல்ல என்று வாதிட்டார்.

பல ஆண்டுகளாக வழக்கு நடந்து தீர்ப்பு எழுதப்படும் வேளையில் மீண்டும் ஜெயலலிதா மீண்டும் எங்கள் மாகாண முதல் அமைச்சராகிவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும். தமிழ் நாட்டில் ஆளும் கட்சியினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து தீவைத்து கொழுத்தப்பட்டது மூன்று கல்லூரி மாணவிகள் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா தன் வசமிருந்த அரசுச் சொத்தை அரசிடமே திருப்பி தந்துவிடுவதாக தெரிவித்தார்.

அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுகொண்ட நீதிமன்றம், ‘ ஜெயலலிதா தான் வாங்கிய சர்ச்சைக்குரிய சொத்தை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் மேலும் அவர் ஒரு கையெழுத்தை, தன் கையெழுத்தே இல்லை என்று மறுத்துள்ளார். இதை அவரது மனசாட்சிக்கே விட்டு விட்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்.. என்று தீர்ப்பு எழுதியது.

ஒரு குற்றவாளியின் குற்றத்தை அவரது மனசாட்சியின் தீர்ப்புக்கே விட்டுவிடும் பெருந்தன்மை வாய்ந்த சிறப்பான நீதிமன்றங்கள் எங்கள் நாட்டில் ஈனமுன் ஏராளம் உள்ளன.

ஆகவே ஒரு சாதாரண வேலைக்காரியான சங்கீதாவுக்கு அநீதி இழைத்தார் என்பதற்காக எங்கள் இந்திய கலாச்சாரத்தின் வடிவமான தேவயானி கோப்ரகடே மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது என்பது தேவையற்ற விஷயம் என்றே கருதுகிறேன்.

வேண்டுமானால் தேவயானி கோப்ரகடே விஷயத்திலும் நீங்களும் உங்கள் சட்டமும் எங்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அணுகு முறையை பின்பற்றி தேவயானி கோப்ரகடேயையும் மனசாட்சியின்படி நடக்குமாறு அறிவுறுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

மேலும் உங்கள் காவலர்களால் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டபோது அவர் கிரிமினல்களோடு அடைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் அதை இந்திய நாடாளுமன்றம் கண்டித்ததாகவும் படித்தேன்.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்றே இதை நான் கருதுகிறேன் ஏனென்றால் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே முப்பத்து மூன்று சதவிகிதம் பேர் கிரிமினல்கள் என்று அதிகார பூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அதாவது சின்னச் குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்கும் பெரிய குற்றவாளிகளை நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவது எங்கள் நாட்டில் ஒரு நீண்டகால வாடிக்கை.
இந்த நடைமுறைகளை அமேரிக்காவும் கடை பிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.

இனி வரும் காலங்களிலாவது எமது இந்திய கலாச்சாரம் இறையாண்மை பண்பாடு போன்றவற்றை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


No comments:

Post a Comment